Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை - திண்டுக்கல் மோதல்

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரின் பரபரப்பான பைனலில் கோவை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதுகின்றன. மொத்தம் 8 அணிகள் களமிறங்கிய தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 8வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றில் பலப்பரீட்சை நடத்தின. குவாலிபயர்-1ல் திருப்பூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.

எலிமினேட்டரில் சேப்பாக் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல், அடுத்து நடந்த குவாலிபயர்-2 ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை பந்தாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் கோவை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இரவு 7.15க்கு தொடங்குகிறது.

ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி 2022, 2023, 2024 என தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 2022ல் மழை காரணமாக பைனல் நடைபெறாததால் கோப்பையை சேப்பாக் கில்லீஸ் அணியுடன் பகிர்ந்துகொண்டது. 2023 பைனலில் நெல்லை கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. இப்போது ஹாட்ரிக் சாம்பியனாகும் முனைப்புடன் உள்ள அந்த அணி, லீக் சுற்றில் விளையாடிய 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர வீரர் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியிலும் இந்திரஜித், விக்னேஷ், பூபதிகுமார், விமல்குமார், வருண் சக்ரவர்த்தி, ஆதித்யா கணேஷ் என சரவெடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதிலும் கேப்டன் அஷ்வின் நேற்று முன்தினம் திருப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராகக் களமிறங்கி, ஆட்டமிழக்காமல் 30 பந்தில் 69 ரன் (11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அசத்தினார். முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைக்க திண்டுக்கல்லும், தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை வசப்படுத்த நடப்பு சாம்பியன் கோவையும் மல்லுக்கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.