சென்னை-தூத்துக்குடி-சென்னை விமான சேவை 30ம் தேதி முதல் 12 விமானங்களாக அதிகரிப்பு: திருச்சிக்கும் கூடுதல் விமானங்கள்
சென்னை: சென்னை- தூத்துக்குடி- சென்னை இடையே இயக்கப்படும் 8 விமானங்கள் வரும் 30ம்தேதி முதல் 12 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல் சென்னை- திருச்சி- சென்னை இடையே இயக்கப்படும் 14 விமானங்கள், வரும் 22ம் தேதி முதல் 16 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு பயணிகள் தற்போது அதிக அளவில் பயணிக்கின்றனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன. சென்னை- தூத்துக்குடி இடையே 4 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 4 விமானங்களும், ஒரு நாளுக்கு 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த விமானங்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதோடு பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை காலங்கள் போன்றவைகளில் விமானங்களில் டிக்கெட் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அதிக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 30ம் தேதியில் இருந்து, சென்னை- தூத்துக்குடி இடையே மேலும் 2 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 2 விமானங்களும், 4 விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் இனிமேல் சென்னை- தூத்துக்குடி- சென்னை இடையே, ஒரு நாளில் 12 விமானங்கள் இயக்கப்படும். அதில் 6 விமானங்கள், சென்னை-தூத்துக்குடி இடையேயும், 6 விமானங்கள், தூத்துக்குடி- சென்னை இடையேயும் இயக்கப்பட உள்ளன. இதேபோல், சென்னை- திருச்சி- சென்னை விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன.
இப்போது சென்னை- திருச்சி இடையே, நாள் ஒன்றுக்கு 7 விமானங்களும், திருச்சி -சென்னை இடையே நாள் ஒன்றுக்கு 7 விமானங்களுமாக 14 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன. இதையடுத்து திருச்சிக்கும் கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற 22ம் தேதி முதல் மாலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து புதிதாக புறப்படும் விமானம், இரவு 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும். அதன்பின்பு திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும். தொடர்ந்து, சென்னை- திருச்சி- சென்னை இடையே, தினமும் இயக்கப்பட்டு வரும் 14 விமான சேவைகள் வரும் 22ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 16 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.