Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை தி.நகரில் ஜெ.அன்பழகன் பெயரில் ரூ.165 கோடியில் கட்டப்பட்ட இரும்பு மேம்பாலம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்

சென்னை: சென்னை தி.நகரில் ரூ.165 கோடியில் கட்டப்பட்ட முதல் இரும்பு பாலத்துக்கு, ஜெ.அன்பழகன் மேம்பாலம் என பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து சி.ஐ.டி. நகர் 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பால திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.165 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் முழுவதும் 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தான் ஒரு இரும்புப் பாலம் உள்ளது.

அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் இரண்டாவது முழு இரும்புப் பாலம் இப்போது தி.நகரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வணிகப் பகுதி என்பதால், இந்த இரும்புப் பாலம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேம்பாலத்திற்கு 53 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் உள்ளது. அதன் நீளம் 800 மீட்டர். இந்த புதிய மேம்பாலம், பழைய மேம்பாலத்தின் சாய்தளத்தை இடித்துவிட்டு, 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக் சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு என 3 முக்கிய சந்திப்புகளை இணைக்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இந்த பாலத்திற்கு மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ.ராசா எம்.பி., வீட்டுவதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* 2 கி.மீ. நீளத்தில் மிக நீண்ட பாலம்

சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினமும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும்‌மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்பெறுவார்கள். சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தி.நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.