விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் சென்னையில் தங்கி லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதனால் அந்த பெண் தனது பிள்ளைகளுடன் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த மாயவன் மகன் கலையசரன்(20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நட்பாக மாறியுள்ளது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனையறிந்த அவரது கணவர், பெண்ணைக் கண்டித்துள்ளார்.
பின்னர் அந்த பெண் கலையரசனுடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அப்பெண்ணை தொடர்பு கொண்ட கலையரசன், தன்னிடம் பேசவில்லை என்றாலோ, சந்திப்பதை தவிர்த்தாலோ நாம் இருவரும் சேர்ந்து இருப்பது போல் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் எனக் கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கலையரசைன கைது செய்து சிறையில் அடைத்தனர். கலையரசன் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் 3ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.