சென்னை: சென்னையில் ஆறு மாதங்களுக்குள் திறன்மிகு கேம் டெவலப்பர்ஸ் மையம் உருவாக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்த 17வது இந்திய கேம் டெவலப்பர்ஸ்-2025 மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனத்திற்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய கேம் டெவலப்பர் கான்பரன்ஸ் தனது 17வது பதிப்பை, முதல் முறையாக சென்னையில் நடத்துகிறது. இதனை ஒட்டி, தமிழக அரசு தனது அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டெட் ரியாலிட்டி கொள்கை 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கொள்கை, தமிழகத்தின் டிஜிட்டல் படைப்பாற்றல் மற்றும் கேமிங் துறைகளை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான முன்னேற்றமாகும்.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை 1975ல் கலைஞர் அமைத்த எல்காட் மூலம் உருவாக்கினார். அவரின் வழிகாட்டுதலிலேயே, நாட்டில் முதன்முறையாக மாநில தகவல் தொழில்நுட்ப கொள்கை அறிமுகமானது. முதலமைச்சரின் தலைமையில், தமிழகத்தின் ஐ.டி. துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 2025ம் ஆண்டில் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று, நாடு முழுவதும் முதலிடத்தில் உள்ளது. மேலும், மாநிலத்தில் தற்போது 10,800க்கும் மேற்பட்ட தொழில் முதலிட்டாளர்கள் ஸ்டார்ட் அப்புகள் செயல்படுகின்றன.
புதிய அனிமேஷன், விஷுவல் எபெக்ட், விளையாட்டு, காமிக்ஸ் -எக்ஸ்.ஆர். கொள்கை நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது வணிக எளிதாக்கம், அடிக்கோள அமைப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, நிதி ஊக்கங்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் 6 மாதங்களுக்குள் கேம் டெவலப்பர்ஸ் சிறப்பு மையம் உருவாக்கப்பட உள்ளது. பின்னர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் பிராந்திய மையங்கள் நிறுவப்படும்.
மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் டிஜிட்டல் துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் இணையும் இந்த கொள்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி கிரியேட்டிவ் ஹப்பாக மாற்றும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
