சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.சுந்தர் மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி எம்.சுந்தரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி எம்.சுந்தர். கடந்த 1966ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி சென்னையில் பிறந்த இவர், மெட்ராஸ் சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து கடந்த 1989ல் வழக்கறிஞராக பார்கவுன்சிலில் பதிவு செய்தார்.
சிவில் வழக்குகளில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2016 அக்டோபர் 5ம் ேததி சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி எம்.சுந்தரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல், பாட்னா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி பி.பி.பஜந்திரி, அந்த நீதிமன்றத்திலே தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சோமன் சென், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இதற்கு ஒப்புதல் தந்தவுடன் 3 பேரும் பதவியேற்பார்கள்.