சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது. இதனிடையே கண்ணகி நகரில் பணிக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இன்று காலை அந்த பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தூய்மைப் பணிக்காக சென்ற போது இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே வரலட்சுமி உயிரிழந்தார். தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா். இந்நிலையில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.