சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயில் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்கப்படுமா?.. தென் மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் கருத்துரு சமர்ப்பிப்பு
நாகர்கோவில்: ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கடந்த 9ம் தேதி திருப்பதியிலிருந்து சீரடி சாய் நகருக்கு வாராந்திர ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த திருப்பதி - சீரடி சாய் நகர் வாராந்திர ரயில் கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்த ரயிலின் கட்டணம் மிகவும் குறைவாக அனைத்து ரயில்களும் போல் இருக்கும். இது திருப்பதியில் இருந்து சீரடி சாய் நகருக்கு இயக்கப்படும் 2வது ரயில் சேவை ஆகும். தற்போது மைசூரில் இருந்து சீரடி சாய் நகருக்கு வாராந்திர ரயில், சென்னையில் இருந்து சீரடி சாய்நகருக்கு வாராந்திர ரயில் மற்றும் திருப்பதியிலிருந்து சீரடி சாய்நகருக்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் திருப்பதியில் இருந்து 2வது வாராந்திர ரயில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாய்பாபா பக்தர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு அதிக அளவில் செல்கின்றார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு தற்போது சுமார் 4000 கி.மீ தூரம் இருப்புபாதைகள் கெண்ட தமிழ்நாட்டில் இருந்து சென்னையை தவிர வேறு ஊர்களிலிருந்து நேர ரயில் சேவை கிடையாது. சென்னையில் இருந்து இயக்கப்படும் வாராந்திர ரயில் சென்ட்ரலிருந்து இயக்கப்படுகின்றது. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் எழும்பூர் அல்லது தாம்பரத்துடன் நின்றுவிடுகிறது. இதனால் சாய்பாபா பக்தர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதிலும் குறிப்பாக முதியவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.
தற்போது சென்னை, திருப்பதி, மைசூர்க்கு ஆகிய நகரங்களுக்கு தெற்கே எந்த ஒரு பகுதியிலிருந்து நேரடியாக சீரடி சாய்நகருக்கு செல்ல நேரடி ரயில் சேவை இல்லை.
இந்த பகுதி சாய் பக்தர்கள் ஏதாவது ஒரு ரயிலில் இது போன்ற இடங்களுக்கு சென்று பின்னர் இணைப்பு ரயிலில் பயணம் செய்யும் நிலை உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு நேரடி ரயில் சேவை மிகவும் குறைவாக உள்ளது என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வாரம் 3 முறை ரயில், வாரணாசி வாராந்திர ரயில் என்று 2 ரயில்கள் மட்டுமே நேரடி தனி ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து திருப்பதி போன்ற வேறு சில ஆன்மீக இடங்களுக்கு அந்த பகுதி வழியாக ரயில்கள் இருந்தாலும் இந்த ரயில்களில் அனைத்து பயணிகள் பயணம் செய்வதால் ஆன்மீக தளங்களுக்கு என்று பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பது இல்லை. கன்னியாகுமரியிலிருந்து தனி தனி ரயிலாக ரயிலாக பூரி, திருப்பதி, உடுப்பி, துவாரகா, சீரடி, அயோத்தி, ஹரித்துவார், ரிசிகேசி, அமிர்தசரஸ், நாசிக், கயா, இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சென்னையிலிருந்து சீரடி சாய் நகருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலை ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். சென்னை நகரத்தில் உள்ள சாய்பாபா பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வாராந்திர ரயிலை சென்னை சென்ட்ரல் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த திருப்பதி ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க தென் மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2 ரயிலையும் நீட்டிப்பு செய்து இயக்கும் போது அனைத்து பகுதி பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் யாருக்கும் பாதிப்பு இருக்க போவதில்லை.
நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் கால அட்டவணை எப்படி?
சென்னையில் இருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வரும் ரயிலை கன்னியாகுமரிவரை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இந்த ரயில் செவ்வாய்கிழமை நடு இரவு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை மதியம் 13.30 மணிக்கு ஜோலார்பேட்டை சென்டடைந்துவிடும். பின்னர் வியாழக்கிழமை காலை 10.50 மணிக்கு சீரடி சாய் நகர் சென்றடையும். வியாழக்கிழமை சாய்பாபா தரிசனத்தை தரிசித்து விட்டு அந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு ஜோலார்பேட்டை வந்துட்டு சனிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்து சேருமாறு கால அட்டவணை அமையும்.


