சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திருச்சி: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று அளித்த பேட்டி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டத்தை சுமுகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார். வடமாநில தொழிலாளர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறும் தகவல் தவறானது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.
அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நிச்சயம் அது பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும். நான் அவர்களை சென்று சந்திக்கவில்லை எனக்கூறுவது தவறு. ஏற்கனவே நான்கு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதில் ஒரு தீர்வு ஏற்பட்டவுடன் நாளைக்குள் (இன்று) தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும்.இவ்வாறு கூறினார்.