ஒருவார காலம் நடந்து வந்த சென்னை முற்போக்கு புத்தகக்காட்சி இன்று நிறைவு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்
சென்னை: ஒருவாரம் காலம் நடந்து வந்த சென்னை முற்போக்கு புத்தக்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி சார்பில் ‘திமுக 75 அறிவுத்திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பகங்களின் 58 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முற்போக்கு புத்தகக்காட்சியில் அனுமதி இலவசம் ஆகும். இந்த கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் 8.30 மணி வரையும் நடந்தது. இந்த கண்காட்சியில் புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுப்படியில் வழங்கப்பட்டது.
ஒரு வார காலம் பெரும் வரவேற்புடன் நடைபெற்ற சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. மாலை 5 மணிக்கு மாற்று ஊடக மையம் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளும், ‘அறிவைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் திக பிரசாரச் செயலாளர் அருள்மொழியின் பேச்சு நடைபெற உள்ளன. இறுதியாக திமுக இளைஞர் அணிச் செயலாளர்-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். அறிவுத்திருவிழாவின் நிறைவுவிழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக இளைஞர் அணி அழைப்பு விடுத்துள்ளது.


