சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியில் நேற்று, பிரான்ஸ் வீராங்கனை ஆஸ்ட்ரிட் லூ யான் ஃபூன், இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்காரை எளிதில் வீழ்த்தினார். சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. முன்னதாக, இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் நேற்று நடந்தன.
நேற்றைய போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கார், பிரான்ஸ் வீராங்கனை ஆஸ்ட்ரிட் லூ யான் ஃபூன் மோதினர். துவக்கம் முதல் அபாரமாக ஆடிய ஆஸ்ட்ரிட், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை அரியான் ஹார்டோனோ, இந்தோனேஷியா வீராங்கனை பிரிஸ்கா மேட்லின் நுக்ரோஹோ மோதினர். இப்போட்டியில் அரியான், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
