சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபர் 27ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் தாய்லாந்து வீராங்கனை லன்லாலாவை வீழ்த்தி, இந்தோனேஷிய வீராங்கனை ஜேனிஸ் டிஜென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை கிம்பெர்லி பிரெல், சீன தைபேவை சேர்ந்த ஜோனா கார்லேண்டை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜேனிஸ் டிஜென், கிம்பெர்லி மோதினர்.
துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ஜேனிஸ், முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை, 6-3 என்ற புள்ளிக் கணக்கிலும் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஜேனிஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஜேனிசுக்கு ரூ.32 லட்சம் பரிசும், 250 டபிள்யுடிஏ புள்ளிகளும் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த கிம்பெர்லிக்கு ரூ.10.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
