சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெய்சங்கர். கம்பீரம், துணிச்சல்மிக்க நடிப்பால் மக்களை கவர்ந்த ஜெய்சங்கர், ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ‘மக்கள் கலைஞர்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ஜெய்சங்கரின் கலைச்சேவையை பாராட்டி கவுரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்வதற்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தமிழக அரசு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ என பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை நேற்று வெளியிட்டது.
அதன்படி, இனி அந்த பகுதி ஜெய்சங்கர் சாலை என்றே அழைக்கப்படும். இந்நிலையில், ஒரு சிலர் கல்லூரி சாலைக்கு பதில் ஜெய்சங்கர் சாலை என்று மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிப்பார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது. அதில் கல்லூரி சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கல்லூரி பாதைக்கே/சந்து ‘ ஜெய்சங்கர் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி சாலையின் பெயரை மாற்றியதாகத் தவறான செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு விளக்கமளித்துள்ளது.