Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொதுமக்கள் அறியும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் கூட்டுறவுத்துறை சேவை விளம்பரம்: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை, பல்லவன் சாலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: கூட்டுறவுத்துறையின் மூலம் மொத்தம் 34 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாகவும் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு கைகொடுத்து தூக்கிவிடும் துறையாகவும் கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது.

அதேபோன்று, குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்திடும் வகையில், தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத்துறையின் பதிவாளர் அலுவலகம், மண்டல மற்றும் சரக அலுவலகங்கள், மின் அலுவலகமாக (e-Office) மாற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகளும் நடந்து வருகிறது. கடனாளிகளின் நிதிச்சுமையை குறைத்திடும் வகையில், கூட்டுறவு வங்கி/ சங்கங்களில் நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ள பண்ணை சாரா கடன்களை வசூல் செய்ய தமிழக அரசால் சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் கூட்டுறவுத்துறையின் சேவைகள் சென்றடையும் வகையில் கூட்டுறவு வங்கி/ சங்கங்களில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பித்திட ஏதுவாக கூட்டுறவு எனும் செயலியும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் முன்னோடி திட்டங்களை அறிவிக்கின்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகர் பகுதியில் இயங்கி வரும் 200 பேருந்துகளில் கூட்டுறவு சேவைகள் குறித்து விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் உற்ற துறையாக திகழ்ந்து வருகிறது. மக்களுக்கான வங்கியும், கூட்டுறவு வங்கியே ஆகும். கூட்டுறவுத்துறையினை பொதுமக்கள், விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது மட்டுமன்றி, கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலாளர் சத்யபிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அம்ரித், கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.