சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் எண்ணூர் அருகே அமைக்கும் 330 மெகாவாட் மின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம், சுற்றுச்சூழல் அனுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. மேற்கண்ட உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலானஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் சபரீஸ் சுப்ரமணியம் ஆகியோர், “இந்த 330 மெகாவாட் மின் திட்ட பணிகளுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 17ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டுவர ஐந்து கிமீ தூரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது.
அதில் 647 மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிவடைய உள்ளன. எனவே அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டனர். தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தமிழ்நாடு அரசு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்தார். பொதுநலன் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.