சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடந்தது. இந்த அதாலத்தில் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், வழக்கு தொடர்வதற்கு முந்தைய புகார் மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், தாலுகா அளவில் 489 அமர்களும் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 498 அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சென்னைஐகோர்ட் வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில் 14,992 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 13,176 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் வழக்காடிகளுக்கு ரூ.143 கோடியே 16 லட்சத்து 791 பைசல் செய்யப்பட்டது. பல வழக்குகளில் சமரசம் எட்டப்பட்டதால் இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகர முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
+
Advertisement