சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதி பதவியேற்ற நீதிபதி நிஷா பானு சிவில், கிரிமினல் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாய வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவராகவும், தமிழ்நாடு மகளிர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகவும் பதவி வகித்தவர்.
சென்னை உயர் நீதிமன்ற பிரதான அமர்வு மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் ஒன்றிய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பரிந்துரையை அனுப்பியது.
இதை பரிசீலித்த ஜனாதிபதி, நீதிபதி நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதி நிஷா பானு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள் 21 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.