Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை நகை கடை பிரதிநிதிகளிடம் ரூ.10 கோடி தங்கம் கொள்ளையில் ராஜஸ்தான் வாலிபர்கள் சிக்கினர்: நகைகள், துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்

மண்ணச்சநல்லூர்: சென்னை நகை கடை பிரதிநிதிகளிடம் ரூ.10 கோடி தங்க நகை கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க நகை கடை விற்பனை பிரதிநிதிகள் குணவந்த், மகேஷ் ஆகியோர் கடந்த மாதம் 8ம் தேதி கிலோ கணக்கில் தங்க கட்டிகளை காரில் எடுத்துக்கொண்டு சேலம், கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகை கடைகளில் விற்பனைக்கு கொடுத்தனர்.

பின்னர் திண்டுக்கல்லில் ஒரு நகை கடையில் விற்பனையை முடித்த இவர்கள் மீதமுள்ள 10 கிலோ தங்க கட்டிகளுடன் கடந்த மாதம் 13ம்தேதி சென்னை புறப்பட்டனர். காரை ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் பிரதீப் கான் ஓட்டினார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நள்ளிரவு வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக டிரைவர் பிரதீப் கான் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார். அதிலிருந்து 3 பேரும் கீழே இறங்கினர். அப்போது பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரிலிருந்து இறங்கிய கும்பல், டிரைவர் உள்ளிட்ட 3 பேரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறிதது சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

அந்த கும்பல் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மங்கிலால் தேவாசி(22), விக்ரம் ஜாட்(19) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரகசிய உளவாளி மூலம் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் மத்திய பிரதேசத்தின் பர்வானிக்கு செல்லும் ஒரு பஸ்சில் இவர்கள் சென்றது தெரியவந்தது. அந்த பஸ்சில் ஏறி 2 பேரையும் கைது செய்தோம். அவர்களிடமிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 9.432 கிலோ தங்க நகைகள், ரூ.3லட்சம் ரொக்கம், ஒரு நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தோம். தங்க கட்டிகள் சிலவற்றை தங்க பிஸ்கட்டுகளாக உருக்கி வைத்திருந்தனர். அவற்றையும் பறிமுதல் செய்தோம் என்றனர்.