நெல்லை: பாளையில் ஐடி ஊழியர் ஆணவக்கொலை வழக்கில் கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட எஸ்ஐ தம்பதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், பிரையன்ட் நகரைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர், அரசு பள்ளி ஆசிரியை தமிழ்செல்வியின் மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர் பி.இ., முடித்து விட்டு, சென்னை துரைப்பாக்கத்தில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கவின் செல்வகணேஷின் பள்ளித் தோழி சுபாஷினி நெல்லை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவ கிளினிக்கில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
பெண் டாக்டரின் தம்பி சுர்ஜித் (21), தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பாளை கேடிசி நகரில் குடியிருந்து வருகின்றனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் எஸ்ஐக்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாளை கேடிசி நகர் சித்தா மருத்துவ கிளினிக்கிற்கு தனது தாத்தாவை சிகிச்சைக்கு கவின் செல்வ கணேஷ் அழைத்து வந்தார். அப்போது அவரது காதலியான பெண் சித்தா டாக்டர் சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த சுர்ஜித், கவின் செல்வ கணேசை வெட்டிக் கொன்றார்.
இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தனர். மேலும் கொலைக்கு தூண்டியதாக அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி பிறப்பித்துள்ளார்.