சென்னை: மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) சார்பில் முன்னாள், மூத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கான அகில இந்திய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த மாஸ்டர் ஸ்குவாஷ் போட்டி, வயது அடிப்படையில் 35, 40, 45, 50, 55, 60, 65, 70 வயதுக்கு மேற்பட்ட 8 பிரிவுகளில் ஆண்கள் களம் இறங்குவார்கள். பெண்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒரே ஒரு பிரிவில் மட்டும் விளையாட உள்ளனர். இன்று முதல் ஆக. 6ம் தேதி வரை நடைபெற உள்ள 9 பிரிவுகளில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 185 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
அர்ஜூன் அக்னிஹோத்ரி, அமித்பால் கோஹ்லி, அமித் சிங், சாஹில் வோரா, சவுரப் நாயர், ஹரிந்தர்பால் சிங், அங்கூர் குப்தா, சாலியா பிரதீக், ஷிபானி பிலிப், கனிகா பிரேம்நாரயண், ராஜீவ் ரெட்டி என தேசிய அளவிலான முன்னாள் நட்சத்திர வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளுடன், மொத்தம் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்சிசி வளாகத்தில் நடைபெறும்.