Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலையில் கூலிப்படையை இயக்கிய முக்கிய புள்ளி யார்? சேலத்தில் பதுங்கிய 2 பேர் கைது, ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது 2 வழக்கறிஞர்கள், பரபரப்பு தகவல்கள்

தாராபுரம்: தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் சிக்கினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (35). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது தந்தை லிங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயம் அருகே கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், முருகானந்தத்தின் சித்தப்பா தண்டபாணி உட்பட அனைவரும் விடுதலையாகினர்.

சித்தப்பா தண்டபாணிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர முருகானந்தம் முடிவு செய்தார். அவர் நடத்தும் மெட்ரிக் பள்ளியின் 4வது தளம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அதனை கோர்ட் மூலம் இடித்து தள்ளினார். ஒட்டுமொத்த பள்ளி கட்டிடமும் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக பள்ளியின் உறுதி தன்மையை பார்வையிட கடந்த 28ம் தேதி முருகானந்தம், ரகுராம் (35), அவரது வக்கீல் தினேஷ் (35) உள்பட 4 பேர் பள்ளிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படையினர் முருகானந்தம், ரகுராம், தினேஷ் ஆகியோரை வெட்டினர்.

இதில் முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருச்சி மாவட்டம் முசிறி தட்சிணாமூர்த்தி (29), சேலம் போளூர் ராம்குமார் (22), நாமக்கல் சுந்தரம் (26), திருச்சி நாகராஜன் (29), தாராபுரம் நாட்டு துரை (65) ஆகியோர் போலீசில் சரணடைந்தனர். மேலும், வக்கீல் படுகொலையில் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்தவர்கள் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சேலம் கோரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த நாமக்கல்லை சேர்ந்த சசிகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை தாராபுரத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கொலை செய்யப்பட்ட வக்கீல் முருகானந்தம் தாய் சுமத்ரா தேவி கூறியதாவது, ‘முருகானந்தம் கொலை செய்யப்பட்டபோது, எங்களது உறவினரும் புகார்தாரருமான தங்கவேல், ஆசிரியர் குருசாமி ஆகியோர் நேரில் பார்த்து பதறி துடித்துள்ளனர்.

கூலிப்படையை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள், முருகானந்தத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்கள், சுமார் 6 அடி உயரம் வரை இருந்துள்ளனர். ஆனால், போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படும் குற்றவாளிகள் மிகவும் வயதில் சிறியவர்கள். இவர்கள், சம்பவ இடத்தில் இல்லை. உண்மை குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து மறைக்கப்பட்டுள்ளனர். வக்கீல் முருகானந்தம் கொலை வழக்கில், ஒரு முக்கிய புள்ளி கூலிப்படையை இயக்கி உள்ளார்.

அவர் யார்? கூலிப்படையை எங்கிருந்து அழைத்து வந்தார்? கூலிப்படைக்கு கைமாற்றிய தொகை எவ்வளவு? கொலை நடந்தபோது களத்தில் நின்ற கூலிப்படையினர் எத்தனை பேர்? களத்திற்கு வராமல், பின்னால் இருந்து இயக்கியது யார்? யார்? என்கிற அத்தனை தகவல்களும் போலீசாரால் மறைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சரண் அடைந்துள்ள, முருகானந்தத்தின் சித்தப்பாவுக்கு வேண்டப்பட்ட இரு வக்கீல்கள்தான் இக்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்து, `ஸ்கெச்’ போட்டு கொடுத்துள்ளனர். இந்த இரு வக்கீல்களுக்கும், கூலிப்படை பற்றிய முழு தகவல் தெரியும்.

கூலிப்படையை இயக்கிய முக்கிய புள்ளி பற்றிய முழு தகவல்களும் தெரியும். ஆனால், போலீசார் அனைத்து தகவல்களையும் மறைத்து, இருட்டடிப்பு செய்கிறார்கள். இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை வக்கீல் முருகானந்தம் உடலை வாங்க மாட்டோம், காவல்துறையினரின் இருட்டடிப்பு நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஜடி அல்லது சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் வக்கீல் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.