திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக முருகானந்தத்தின் சித்தப்பாவும் தனியார் பள்ளி தாளாளருமான தண்டபாணி உள்பட 17 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்தநிலையில் தண்டபாணி, நாட்டுதுரை, தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேர் ஜாமீன் கேட்டு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைய முருகானந்தம், பாலமுருகன், அண்ணாத்துரை, சுதர்சன், சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
சுந்தரம், ராம், நாகராஜன், தட்சிணாமூர்த்தி ஆகிய 4 பேர் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொலையான வக்கீல் முருகானந்தத்தின் தாயார் சுமித்ராதேவி தரப்பில் வக்கீல் முருகேசன் ஆஜராகி ஜாமீன் வழங்க ஆட்சேபணை தெரிவித்தார். அத்துடன் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்றும் புலன் விசாரணை நடந்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து 10 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி குணசேகரன் தள்ளுபடி செய்தார்.