சென்னை: சென்னை நகரில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்த நிலையில், இன்று அதிகாலையிலே இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வரும் மழை காரணமாக சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய சாலையில் மழை நீரோடு கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
வளிமண்டலத்தில் காற்று வேறுபாடு காரணமாக கனமழை பெய்வதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம், அடையாறு, ஆர்.ஏ.புரம் பகுதிகளில் 50 நிமிடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் காலை 9 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது. பகலில் வெயில் காணப்பட்டாலும் இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் நாளை பகல் நேரத்தில் வெயில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.