Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்; டைல்ஸ் வெடித்துச் சிதறியதால் பதற்றம்

சென்னை: தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்தில் இன்று காலை திடீர் அதிர்வு ஏற்பட்டதால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற பெயரில் 10 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் நேற்று வழக்கம்போல் காலை 10 மணிக்கு ஊழியர்கள் பணிக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 10.45 மணி அளவில் நாமக்கல் கவிஞர் மாளிகையான 10 மாடி கட்டிடத்தில் திடீரென ஒரு சத்தம் கேட்டதாகவும், அப்போது 10 மாடி கொண்ட கட்டிடம் லேசாக அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பணியில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி ஓடி வந்தனர். இதனால் இங்கு சிறிதுநேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ், தீயணைப்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 10 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த கட்டிடத்தில் முதல் மாடியில் டைல்ஸ் உடைந்ததும், அதனால் அதிர்வு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிதுநேரம் பதற்றம் தணிந்தவுடன், தலைமை செயலக ஊழியர்கள் மீண்டும் 10 மாடி கட்டிடத்திற்கு சென்று தங்கள் வழக்கமான பணிகளை செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் கூறியதாவது: நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் வேளாண்மை துறையில் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்த டைல்ஸ் அழுத்தத்தின் காரணமாக காற்று உட்புகுந்து வெடித்து சிதறியது. தலைமை செயலக அலுவலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் மிகவும் பழைமையானது. தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். முதல்வர், அமைச்சர்கள் பணியாற்றி வரும் 2 மாடி கொண்ட பழைய கட்டிடத்திற்கு இதுவரை தீயணைப்பு துறை பாதுகாப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இதை வலியுறுத்தி தலைமை செயலக சங்கம் சார்பில் அரசுக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம்.

அதனால்தான் தலைமை செயலகத்திற்காக கட்டப்பட்ட ஓமந்தூரார் வளாகத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று கோருகிறோம். இந்த கட்டிடத்தை பொறுத்தவரை கட்டுமானத்தை மறுஆய்வு செய்து, பாதுகாப்பானதா என்று பார்க்க வேண்டும். இன்றைக்கு, முதல் மாடியில் ஏர் கிராக் காரணமாக வரிசையாக டைல்ஸ் வெடி சத்ததுடன் பெயர்ந்தது. இதனால் ஊழியர்கள் அனைவரும் பயந்து விட்டனர். இதனால், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

* அச்சப்படத் தேவையில்லை.. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு வந்து ஆய்வு பணியில் ஈடுபட்டார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுனர்களிடம் பேசினார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறும்போது, “10 மாடி கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் 1974ல் கட்டப்பட்டது. இதில்தான் தலைமை செயலகத்தின் முழு அலுவலகமும் உள்ளது. இதில் முதல் தளத்தில் வேளாண் துறை இருக்கிறது. இங்கு டைல்ஸ் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக சிறிய அளவிலான சத்தம் கேட்டுள்ளது. இதுபற்றி தெரிந்தவுடன், தொலைக்காட்சியில் செய்தி பார்த்ததும் உடனடியாக விரைந்து வந்து, பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை. நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட டைல்ஸ். இது நாளாக நாளாக ஏர்கிராக் ஏற்படும். இன்னும் 2 நாளில் ஏர்கிராக் பகுதியில் புதிய டைல்ஸ் மாற்றப்படும். ஊழியர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.