Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரிகைசி வெற்றி

சென்னை: இந்தியாவின் கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 3வது பதிப்பு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ளனர்.இந்த புள்ளிகள் 2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்கான தகுதி பெறுவதை தீர்மானிப்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டி, மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடர் ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்படுகிறது. போட்டியின் தொடக்க நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான வி.பிரணவ், கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டம் 44வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவோண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 49-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி, அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் மோதினார்.

இதில் நிஹால் சரின் 52வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சேலஞ்சர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான எம்.பிரனேஷ், ஆர்யன் சோப்ரா ஆகியோர் மோதினர். இதில் எம்.பிரனேஷ் 26-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் ஒரு புள்ளி பெற்றார். அபிமன்யு புராணிக், அதிபன் பாஸ்கரன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான லியோன் லூக் மென்டோன்கா, சர்வதேச மாஸ்டரான ஜி.பி. ஹர்ஷவர்தனுடன் மோதினார். இதில் லியோன் லூக் மென்டோன்கா 47வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.  இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.வைஷாலி - பா.இனியன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முன்னணி வீராங்கனையான இந்தியாவின் துரோணவல்லி ஹரிகா தனது முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இரு பிரிவிலும் இன்று 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.