விழிபிதுங்க வைக்கும் தங்கம் விலை; இன்றும் ஒரே நாளில் இருமுறை விலை உயர்ந்தது; சவரனுக்கு ரூ.90,720க்கு விற்பனை!
சென்னை: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் அறிவிக்கப்பட்ட இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீதான அதிரடி வரி விதிப்பு, உலக நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போர் பதற்றம் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் வரலாறு காணாத உச்சமாக செப்டம்பர் 23ம் தேதி ஒரு பவுன் விலை உச்சமாக ரூ.85 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து புதிய உச்சத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தங்கம் விலை தினம்தோறும் உச்சம் தொட்டு நகை பிரியர்களை கதிகலங்க வைத்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.31 ஆயிரம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை ரூ.33 ஆயிரம் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு நேற்று காலையும் தொடர்ந்தது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,400க்கும், ஒரு பவுன் ரூ.120 அதிகரித்து ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலையிலும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி மாலையில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.91,400 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.11,425க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் இருமுறை உயர்ந்தது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1320 குறைந்த நிலையில் பிற்பகல் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,340-க்கு விற்பனையாகிறது. மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் விலை உயர்வால், திருமண சீசன், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வருவதால் தங்கத்தை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர்.