Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சென்னையில் திமுக 75 அறிவு திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த முற்போக்கு புத்தகக்காட்சியை இரண்டரை மணி நேரம் பார்வையிட்ட முதல்வர்

* திராவிட இயக்கம், வரலாறு, இலக்கியம், சுயசரிதை என 63 புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினார்

சென்னை: சென்னை வள்ளூவர் கோட்டத்தில் திமுக 75 அறிவு திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த முற்போக்கு புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரண்டரை மணி நேரம் பார்வையிட்டார். திராவிட இயக்கம், வரலாறு, இலக்கியம், சுயசரிதை என 63 புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினார். திமுக இளைஞர் அணி சார்பில் திமுக 75 முப்பெரும் அறிவுத் திருவிழா கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி(நேற்று) வரை நடந்தது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 8ம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முற்போக்கு புத்தகக் காட்சியினை திறந்து வைத்தார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், திமுக 75 வரலாற்றுக் கண்காட்சி மற்றும் “தன்மானம் காக்கும் கழகம்” மேடை நாடகத்தினை பார்வையிட்டார். பின்னர், இருவண்ணக் கொடிக்கு வயது 75 கருத்தரங்கத்தினை தொடங்கி வைத்து, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு”நூலினையும் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், முற்போக்கு புத்தகக் காட்சியை பார்ப்பதற்காக வந்தார். அவரை திமுக இளைஞர் அணியினர், திமுக நிருவாகிகள், வாசகர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், முற்போக்கு புத்தகக் காட்சியை சுமார் இரண்டரை மணி நேரம் பார்வையிட்டார்.

அப்போது, அங்கிருந்த மாணவர்கள், புத்தக பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து புத்தக அரங்குகளுக்கும் நேரடியாக சென்று 63 புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினார். அதில், திராவிட இயக்க புத்தகங்கள், வரலாறு புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை படித்துப்பார்த்து வாங்கினார்.

திமுக 75 அறிவுத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த புத்தகக் காட்சியில் 56 அரங்குகளில் பல்வேறு புத்தகப் பதிப்பாளர்களின் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். இங்கு, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் பார்வையிட்டு, பல்வேறு புத்தகங்களை வாங்கி பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் அறிவுத் திருவிழாவினை வெற்றிகரமாக நடத்திய திமுக இளைஞர் அணி செயலாளரும், முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, சென்னை மாநகர நூலக ஆணையக் குழு உறுப்பினர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

* தொடரட்டும் அறிவுத்திருவிழா

“திமுக 75 அறிவுத் திருவிழா”-வில் அமைக்கப்பட்டுள்ள முற்போக்கு புத்தகக் காட்சியைப் பார்வையிட்டது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்!. வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக, ‘Carry on, but remember’ எனும் பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது திமுக இளைஞர் அணி தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.