செனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையத்தினைத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைக்கும் விதமாக, மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை இன்று (10.10.2025) மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) தொடங்கப்பட்டு, 24 x 7 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும், அந்தந்த வட்டாரங்களுக்குட்பட்ட பகுதிகளில் விரைந்து பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், மேயர் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ICCC) போன்று, மூன்று வட்டார அலுவலகங்களிலும் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (RICCC) உருவாக்கப்படும்.
இதன் மூலம், பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியாக பெறப்படும் குறைபாடுகள் மீது, சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையர் அவர்களால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க இயலும். இதற்காக ரூபாய் 3.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேயர் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைக்கும் விதமாக, அண்ணாநகர் மண்டலம், செனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் 1000த்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 55 மழை சென்சார், 68 - FLOOD சென்சார், 40 - FLOOD -O- மீட்டர், 159 பம்ப் கண்காணிப்பு சாதனங்கள், சுரங்கப்பாதைகளில் 17 தானியங்கி தடை (BOOM BARRIERS), 18 சுற்றுச்சூழல் சென்சார்கள், 50 ஸ்மார்ட் துருவங்கள், 100 மாறுபடும் செய்தி காட்சிப்பலகை, 50 பொது அறிவிப்பு ஒலி பெருக்கி, 50 இடங்களில் உள்ள அவசர அழைப்பு பொத்தான் (Emergency Call Button), 50 பொது வைஃபை, பொதுமக்கள் குறைதீர்ப்பு (1913, சமூக ஊடகம், இணையதளம்), கிளவுட் (தரவு மையம் மற்றும் பேரிடர் மீட்பு மையம்), 24x7 செயல்பாடு ஆகியன தனித்துவமாக இயக்கப்படுகின்றன.
அந்தந்த வட்டார துணை ஆணையர்களுக்கு வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கான செயல்பாடுகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், ஆக்கப்பூர்வமாக பணிகள் மேற்கொள்வதற்கும் இந்த கட்டுப்பாட்டு மையம் உதவிகரமாக அமையும். இந்நிகழ்ச்சியில், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.