சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: டிசம்பர் 6 முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம்
சென்னை: ஊரே அடங்கிய பிறகு, ஓய்வில்லாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் கூறினார். மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம், அவர்களுக்கு குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் புதிய நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதல்வர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்னதான், சத்தான உணவு - டயட் - எக்சர்சைஸ் என்று இருந்தாலும், நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், அதற்கு அடிப்படை என்னவென்று கேட்டால் தூய்மைதான்.
வெயில் - மழை - வெள்ளம் - புயல் என்று இந்த மாநகரம் எந்த பேரிடரை எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வருவதில் உங்களுடைய பணி தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான், நம்முடைய சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது. உங்களால்தான் நீர்நிலைகள் தூய்மையாக இருக்கிறது. உங்களால்தான் குழந்தைகள் நலமாக பள்ளிக்கு எல்லாம் சென்று வருகிறார்கள். நான் இந்த சென்னை மாநகருக்கு மேயராக பொறுப்பேற்றபோது, தலைவர் கலைஞர் எனக்கு என்ன அறிவுரை சொன்னார் என்றால், ‘இது பதவியல்ல; பொறுப்பு’ என்று சொன்னார்.
அதேபோல், நான் உங்களுக்கு சொல்கிறேன், நீங்கள் செய்வதும் வேலை இல்லை; அது சேவை. சென்னையில் நைட் டிராவல் செய்பவர்களுக்கு தான் தெரியும், பகலெல்லாம் பிசியாக இருக்கின்ற இந்த சிட்டியில், ஊரே அடங்கிய பிறகு, ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் நீங்கள்தான். உங்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை உணர்வை பார்த்து - நான் மட்டுமல்ல; இந்த மாநகரமே நன்றியுணர்ச்சியோடு உங்களை வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு எல்லாம் என்னுடைய இதயபூர்வமான நன்றி.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த சென்னைக்கு மேயராக பொறுப்பேற்றபோது, தூய்மையான நகராக இந்த நகரை உயர்த்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தூய்மை பணிகளில், இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினோம். குப்பையை, மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று பிரித்து வைத்து, அதை மேலாண்மை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எல்லாம் கொண்டு வந்தேன். அதையெல்லாம்தான் இன்றைக்கு நாம் அடைந்திருக்கின்ற மாற்றத்திற்கு முதல் படி.
இந்த மாநகரத்தை தூய்மையாக பாதுகாக்குகின்ற உங்களை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை. உங்களுடைய மாண்பு காக்கப்பட வேண்டும். உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுதான் சமூகநீதி. இந்த சமூகநீதி பயணத்தில் உங்கள் சுயமரியாதையை காத்து - உங்கள் பசியை போக்கிடத்தான், இன்றைக்கு இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
இந்த திட்டத்தின்படி, தூய்மைப்பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு இடையில், உணவு வேளையில் சுவையும் - ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படும். தூய்மையான முறையில் சமைத்து, டிபன் பாக்ஸில் வைத்து, சூடு குறையாமல் இருப்பதற்கு வெப்பக் காப்புப் பையில் அதை எடுத்துச் செல்லப்பட்டு, தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகாமையிலேயே உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவு பரிமாறப்படும். நம்முடைய நலனுக்காக உழைக்கின்ற மக்களுக்கு உணவு அளிப்பது அரசின் பொறுப்பு என்கின்ற உணர்வோடுதான் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
இது இல்லாமல், தமிழ்நாட்டில் தூய்மைப்பணியாளர்கள் நலனுக்காக திமுக ஆட்சி காலத்தில் செய்த, மற்ற முக்கியமான திட்டங்கள் நிறைய செய்திருக்கிறோம். நகர்ப்புற தூய்மைப்பணியாளர்களுக்கு முதன்முறையாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் துவங்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கக்கூடிய பணியில் ஈடுபட்டு, பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் வாரிசுகளுக்கு கருணைத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கக்கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். நான் ஏற்கனவே சொன்னது போல, உங்களுடைய மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். இதையெல்லாம் இவர்களுக்காக என்று சொல்லவில்லை. பொதுவாகவே, ஒரு சமூகமாக நம்முடைய ஒழுக்கம் மேம்பட வேண்டும் என்ற அக்கறையுடன் சொல்கிறேன். நம்மைப் பார்த்துத்தான் நம்முடைய பிள்ளைகள் நடந்து கொள்வார்கள்.
நாம் சரியாக நடந்து கொண்டால், அடுத்து வரக்கூடிய தலைமுறை இன்னும் சிறப்பாக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சமூகமாக நாம் நகரவேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய கனவு - உங்களுடைய வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும். உங்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டும் உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படித்து, உயர்ந்த பொறுப்புகளில் உட்கார வேண்டும். கடந்த ஆண்டு, ஒரு செய்தி வந்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்ற ஒரு பெண் - தூய்மைப்பணியாளரின் மகள் - அவர் படித்து, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுதான், நான் விரும்பக்கூடிய முன்னேற்றம். எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகளும் படித்து முன்னேறி, பெரிய அதிகாரிகளாக பொறுப்பிற்கு வரவேண்டும். அவர்களுக்கு நான் பணி நியமன ஆணைகள் தரவேண்டும். இதற்காகத்தான் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். சுய ஒழுக்கம் இல்லாமல், முழுமையான வளர்ச்சியோ, சமூக மேன்மையோ அடைவதற்கு சாத்தியமே கிடையாது. அரசு தன்னுடைய கடமையை செய்யும்.
மக்களும் பொறுப்பாக இருந்து, பொது இடங்களிலும், நம்முடைய மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம். அதற்காக தொடர்ந்து உழைப்போம். தன்னலம் கருதாத தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன், எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கனிமொழி சோமு, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், பரந்தாமன், வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுதர்சனம், பிரபாகர ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வீட்டு வசதி துறை செயலாளர் காகர்லா உஷா, ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* உடைமாற்றும் ஓய்வு அறைகள்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப்பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு அவை கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
* பொதுமக்கள் சிந்தித்து பாருங்கள்
என்னை பொறுத்தவரைக்கும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு சென்னை தான் இந்தியாவிலேயே - ‘கிளீன் சிட்டி’, தமிழ்நாடு தான் ‘கிளீன் ஸ்டேட்’ என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும். இந்த நிலையை நாம் உடனே அடைந்துவிட முடியாது. நன்றாக தெரியும். ஏனென்றால், இதற்கு பல நடைமுறை சிக்கல்களும், தடைகள் எல்லாம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை.
இருந்தாலும், நான் பொதுமக்களை கேட்டுக் கொள்ள விரும்புவது, தூய்மைப்பணியாளர்களை கொஞ்சம் நினைத்துப் பார்த்து, பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது போன்ற செயல்களை எல்லாம் செய்வது நியாயமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். சிலரெல்லாம் வீட்டில் இருந்து, குப்பை தொட்டி வரைக்கும், எடுத்துக் கொண்டு வந்த குப்பையை, குப்பைத் தொட்டியில் போடாமல், அங்கிருந்து தூக்கி எறிவது, அப்படியே அருகாமையில் போடுவது, தூரத்தில் இருந்து தூக்கி வீசுவார்கள். இந்த பழக்கத்தை எல்லாம் ஈசியா மாற்றிக் கொள்ளலாம் என்று முதல்வர் கூறினாா்.


