Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 7 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.9.2025) சென்னை, செனாய் நகர் ‘பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 41.83 கோடி ரூபாய் செலவில் செனாய் நகரில் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடல், கோயம்பேடு சந்திப்பில் பசுமை பூங்கா, ராமாபுரத்தில் திறந்தவெளி பூங்கா, பம்மல், ஈஸ்வரி நகரில் விளையாட்டுத் திடல், வேளச்சேரி மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல் பணி, விஜயநகர் பேருந்து நிறுத்தம், முடிச்சூர், இரங்கா நகரில் மேம்படுத்தப்பட்ட குளம். தங்கசாலையில் 'முதல்வர் படைப்பகம்' ஆகிய 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம்;

சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்;

சென்னை, செனாய் நகரில் 10.56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில், பார்வையாளர்கள் மாடத்துடன் கூடிய கால்பந்து மைதானம், இரண்டு கால்பந்து பயிற்சி மைதானம், கூடைப்பந்து மைதானம், கைப்பந்து ஆடுகளம், நடைபாதை, இருக்கை வசதிகள், உடற்பயிற்சிக் கூடம், நிர்வாக அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு சந்திப்பில் 10.27 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவில், திறந்தவெளி அரங்கம், நிழற்கூடங்கள், எட்டு வடிவ நடைபாதை, சிறார் விளையாட்டுப் பகுதி. உடற்பயிற்சி பகுதி, யோகா தளம், சறுக்கு வளையம், நீரூற்று, நடைபாதை, இருக்கை வசதிகள். பசுமை புல்வெளிகளுடன் கூடிய அழகிய பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, ராமாபுரத்தில் 7.32 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி பூங்காவில், பசுமை நிறைந்த புல்வெளிப் பகுதிகள், சறுக்கு வளையம், திறந்தவெளி அரங்கம், யோகா தளம், தியானப் பகுதி, சிறார் விளையாட்டு பகுதி, எட்டு வடிவ நடைபாதை, நிழற்கூடங்கள், பசுமை நிறைந்த புல்வெளி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.செங்கல்பட்டு மாவட்டம், பம்மல், ஈஸ்வரி நகரில் 4.91 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலில், பார்வையாளர்கள் மாடத்துடன் கூடிய கால்பந்து மைதானம். உட்புற விளையாட்டு அரங்கம், பூப்பந்து மைதானம், யோகா தளம், சிறார் விளையாட்டு பகுதி, உடற்பயிற்சி கூடம். நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, வேளச்சேரியில் 4.45 கோடி ரூபாய் செலவில் மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல் பணிகளும், விஜயநகர் பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நீருற்று, இறகுபந்து மைதானம், கண்கவர் சிலைகள். திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர், இரங்கா நகர் குளம் 3.85 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, அக்குளக்கரையில் காற்றாடி நீருற்று, நீண்ட நடைபாதை, சிறார் விளையாட்டு பகுதி, பொதுமக்கள் கண்டுகளிக்க பார்வையாளர்கள் தளம், இயற்கை வனப்புடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் முதன்முதலில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' போட்டி தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, சிறப்புடன் இயங்கி வருகின்றது. சி.எம்.டி.ஏ சார்பில் 30 'முதல்வர் படைப்பகங்கள்' அறிவிக்கப்பட்டு, 28 'முதல்வர் படைப்பகங்கள்' சென்னை. தங்கசாலையில் 47 இலட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு தேவையான வசதிகளுடன் புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் என மொத்தம் 41.83 கோடி ரூபாய் செலவில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், துணை மேயர் மு. மகேஷ் குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, க.கணபதி, இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.தி.சினேகா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.