சென்னை: சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 3 கி.மீ வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று (டிச.03) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இதேபோல், ராணிப்பேட்டை (அரக்கோணம், நெமிலி வட்டம்), கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.03)விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

