சென்னையில் பேருந்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமானால் 2031-32ம் ஆண்டுக்குள் கூடுதலாக 6 ,457 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்: ஆய்வில் பரிந்துரை
சென்னை: சென்னையில் பேருந்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமானால் 2031-32ம் ஆண்டுக்குள் கூடுதலாக 6 ,457 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகள் அன்றாடப் போக்குவரத்துக்கு பேருந்துகளைப் பயன்படுத்துவது கடந்த 15 ஆண்டுகளில் 8% குறைந்துள்ளதாகவும், இருசக்கர வாகனப் பயன்பாடு 12.5%அதிகரித்திருப்பதாகவும் அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் அன்றாடப் பயணங்களில் மாநகர பேருந்துகளின் பங்களிப்பு 2008ல் 26 % இருந்தது. 2023ல் இது 18%குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இருசக்கர வாகனப் பயன்பாடு 25 விழுக்காட்டிலிருந்து 37.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆட்டோ, வாடகை கார் ஆகியவற்றின் பயன்பாடும் 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உலக வங்கியும் சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பேருந்துகளின் எண்ணிக்கை போதாமை, இதனால் அதிக நேரம் பேருந்துக்கு காத்திருக்க வேண்டியிருப்பது, கடும் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டியிருப்பது, பேருந்து நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பேருந்துகள் செல்லும் வேகம் குறைவாக இருப்பதும், பேருந்துகளுக்கான ஆதரவு குறைந்திருப்பதற்கான முதன்மைக் காரணங்களாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்புற சாலைகளுக்கு இணைப்பு பேருந்துகள் இல்லாததும், பேருந்து பயணங்களை சிரமம் மிக்கவை ஆக்குகின்றன. 2008க்குப் பின் சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 52 % பேர் போக்குவரத்துக்கு இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். மாநகரத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அதற்கேற்ப பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேருந்துகள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றால், சென்னையில் 2031-32ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 6,457 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் 2 ஆயிரத்து 343 பேருந்துகளை நீக்கிவிட்டு புதிய பேருந்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.