Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் இந்தாண்டு இறுதிக்குள் 5 புதிய பஸ் நிலையங்கள் திறக்க திட்டம்: சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தகவல்

சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் ஐந்து புதிய பேருந்து முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு, அவை பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் பொது போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள்தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் சென்னையில் இந்தாண்டு இறுதிக்குள் ஐந்து புதிய பேருந்து நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதில் முதற்கட்டமாக அம்பத்தூரில் புதிய பேருந்து முனைய திட்டமானது 1.6 ஏக்கரில் ரூ.17.34 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 26,000 சதுர அடி கட்டிடத்தில் எம்.டி.சி நிர்வாக அலுவலகம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கின்றார். அதேபோல், செங்கல்பட்டு பேருந்து நிலையம் ரூ.97 கோடி செலவிலும், முல்லை நகர் பேருந்து நிலையம் ரூ.8.1 கோடி மதிப்பீட்டிலும் கட்டிமுடிக்கப்பட்டு அடுத்த மாதம் இறுதியில் திறக்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, நவம்பரில் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் ரூ.14.36 கோடியிலும், தண்டையார்பேட்டை பணிமனை நவீனமயமாக்கல் ரூ.31.42 கோடி மதிப்பீட்டிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர் மற்றும் துறைமுகம் ஆகிய இடங்களில் ரூ.2 கோடி செலவில் 4 சிறிய பேருந்து நிறுத்தங்களும் டிசம்பருக்குள் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளின் நலன் கருதி அவர்களின் வசதிக்கு ஏற்ப பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களை மறுவடிவமைப்பு செய்து வருகின்றோம். அந்தவகையில் வரும் டிசம்பருக்குள் ஐந்து பேருந்து நிலையங்கள் திறக்க ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றோம். இதில், முதல் முறையாக தனியார் நிறுவனங்கள் பேருந்து நிலையங்களை 3 வருடங்களுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

அதாவது, பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம், சுத்தம் செய்தல், வருடாந்திர பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல் மற்றும் கழிப்பறை பராமரிப்பு போன்ற பணிகளை செய்வார்கள். கடைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் விளம்பரங்கள் மூலம் அவர்கள் வருமானம் பெறுவார்கள்.

இந்த முறை மூலம் மாநகராட்சி நடத்தும் பேருந்து நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். இதுமட்டுமின்றி, அடுத்தாண்டு 2026-ல் மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதில் மாமல்லபுரம் பேருந்து நிலையம், குத்தம்பாக்கம் பேருந்து முனையம், ஐயப்பன் தாங்கல், திருவான்மியூர், ஆவடி, பாடியநல்லூர்மற்றும் வள்ளலார் நகர் பேருந்து நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.