Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட திருப்பதி தேவஸ்தான கோயில்களிலும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விற்பனை: செயல் அதிகாரி தகவல்

திருமலை: சென்னை, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட திருப்பதி தேவஸ்தான கோயில்களிலும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுவதாக செயல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் குடோனுக்கு பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிடமிருந்து நெய் டேங்கர் லாரி நேற்று வந்தது. இதற்கான பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பக்தர்களுக்கு மிகவும் சுவையான லட்டு பிரசாதம் வழங்க தரமான பசு நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர்கள், லட்டுகளின் தரத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். தரமான நெய்யால் லட்டுகளின் தரம் அதிகரிக்கும். கடந்த காலங்களில், நெய் சப்ளையர்கள் தரம், சுவை மற்றும் மணம் இல்லாத பசு நெய்யை சப்ளை செய்தனர். நெய்யின் தரத்தை சரிபார்க்க தேவஸ்தானத்தில் தற்போது புதிய அதிநவீன ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உள்ளூர் கோயில்கள் மற்றும் தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக உள்ளூர் கோயில்களான திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், ஸ்ரீநிவாமங்கபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ், அமராவதி, விஜயவாடா, ராஜமுந்திரி, பிதாபுரம், விசாகப்பட்டினம், ராம்பச்சோடவரம் சென்னை, வேலூர், பெங்களூர் ஆகிய இடங்களில் லட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதில் செப்டம்பர் 2ம் தேதி 50 ஆயிரம், செப்டம்பர் 3ம் தேதி 13 ஆயிரம், 4ம் தேதி(நேற்று) 9,500 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.