Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை - பெங்களூர் 30 நிமிடத்தில் பயணம்: ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்; தீவிர சோதனையில் ஈடுபடும் சென்னை ஐஐடி; சவால்கள் என்னென்ன?

ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க் 2013ல் முன்மொழிந்தார். இதுதொடர்பாக ‘ஹைப்பர்லூப் ஆல்பா’ என்ற பெயரில் ஒரு 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார். அவரது ஹைப்பர்லூப் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்தை (563 கிமீ) வெறும் 35 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும், இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 52,266 கோடிகள்) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

உலகில் நடைமுறையில் இருக்கும் ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஹைப்பர்லூப் மூலம் அதிவேகமாகவும் குறைவான செலவிலும் மக்களையும் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று அவரின் ஆய்வறிக்கை கூறியது. இந்த ஹைப்பர்லூப் ஒரு ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பம் என்றும், இதில் பங்களிக்க பலரும் முன்வர வேண்டும் என்றும் அப்போது எலான் மஸ்க் வேண்டுகோள் விடுத்திருந்தார். 12 வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது, உலகின் மிகச் சில நிறுவனங்களே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இதுவரை ஆர்வம் காட்டியுள்ளன. காரணம், இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள்.

ஹைப்பர்லூப் என்றால் என்ன..?

தற்போது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, 410 மீட்டர் தொலைவுக்கு ஒரு ஹைப்பர்லூப் சோதனை பாதையை சென்னை ஐஐடி நிறுவியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த பாதை நிறுவப்பட்டுள்ளது. எஃகு குழாய்களைக் கொண்டு, முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் குறைந்த அழுத்தச் சூழலில் பாட்களை (Pods- பயணிகள் அமர்வதற்கான, ரயில் கோச்சுகள் போன்ற ஒரு வசதி) அதிவேகமாகச் செலுத்துவதே இதன் முக்கிய அம்சம்.

“ஹைப்பர்லூப் ஒரு நவீன போக்குவரத்து அமைப்பாகும், அங்கு அதிவேக பாட்கள், காற்றின் உராய்வு இல்லாத குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக பயணிக்கின்றன. அதாவது வெற்றிடச் சுரங்கப்பாதையில் (Vaccum tunnel), விமானத்தின் வேகத்தில் நகரும் ஒரு ரயில் போல அவை செயல்படும்.”இதில் சக்கரங்களுக்கு பதிலாக, மேக்னடிக் லெவிட்டேஷன் (மாக்லேவ்- Maglev) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாட்கள் மிதக்கின்றன. பின்னர் அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் அதிவேகமாக, குறைந்த ஆற்றலுடன், குறைந்தபட்ச உராய்வு விசையுடன் ஹைப்பர்லூப்பை இயக்க முடியும்.

இதுகுறித்து ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இந்த மேக்னடிக் லெவிட்டேஷன், அதாவது காந்த சக்தியைக் கொண்டு பாட்களை பாதையிலிருந்து சற்று மேலே மிதக்க வைத்து, பிறகு அதை அதிவேகமாக செலுத்தும் மாக்லேவ் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். உதாரணமாக சீனாவின் ‘ஷாங்காய் மாக்லேவ்’ ரயில், உலகின் ‘அதிவேக ரயில் சேவைகளில்’ ஒன்று. இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டக்கூடியது. ஆனால், ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1000 கிமீ என்ற வேகத்தைக் கூட எட்டமுடியும்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவை பொதுப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அதில் அதிகமான மக்கள் பயணிக்க முடியும். ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், அதை இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து சென்னை ஐஐடி-யின் குழு சாதித்தால், உலக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அது அவ்வளவு எளிதல்ல. இன்னும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பைப் பெறும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பு உறுதியாகும்...

* அதிக வேகத்தில் பாட் நகர்ந்தாலும், ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் அவற்றின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். எனவே அது மோதுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழாயின் உள்ளே அவசரகால வெளியேற்ற அமைப்புகளும் நிறுவப்படும்.

* 1000 கி.மீ வேகம் ஒருசில வினாடிகளில் எட்டப்படாது. உள்ளே பயணிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக அந்த வேகம் எட்டப்படும். அதேபோல நிறுத்தும் போது ஒரு குறிப்பிட்ட முறையில் வேகம் குறைக்கப்படும். இதனால் உள்ளே இருக்கும் பயணிகள் அதன் அதிர்வுகளை உணர மாட்டார்கள்.

* சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக செல்வதால், பெருமழை, வெள்ளம் போன்றவற்றால் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

* மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவை ஆபத்தாக மாறுவதற்கு முன்பே தீர்க்கப்படும்.

* நீண்ட தூரத்திற்கு சீல் செய்யப்பட்ட ‘வெற்றிடக் குழாய் அமைப்பை’ உருவாக்குவது அல்லது அதற்கான பிரத்யேக மாக்லேவ் பாதைகளை நிறுவுவது பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான ஒன்று.

* நகர அமைப்புகள் அல்லது இயற்கையை சீர்குலைக்காமல் ஹைப்பர்லூப்பிற்கு ஏற்ற நிலத்தைக் கண்டுபிடிப்பதும், கையகப்படுத்துவதும் எளிதல்ல. இதற்கு தீர்வு, ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே ஹைப்பர்லூப் பாதைகளை உருவாக்குவது தான்.

* ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நமக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது. அது இன்னும் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் அப்படி வர தயாராக இருக்கும்போது, அதற்கென புதிய விதிகளை அரசு கொண்டுவரும்.