350 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம்; ஐதராபாத்தில் இருந்து சென்னை பெங்களூருக்கு புல்லட் ரயில் பாதை: ரூ.5.42 லட்சம் கோடி செலவில் அமைக்க திட்டம்
திருமலை: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு புல்லட் ரயில் பாதை ரூ.5.42 லட்சம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.5.42 லட்சம் கோடி செலவில் 2 புல்லட் ரயில் பாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐதராபாத்-பெங்களூரு இடையே 605 கி.மீ. தூரத்திற்கும், ஐதராபாத்-சென்னை இடையே 760 கி.மீ. தூரத்திற்கும் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த 2 அதிவேக வழித்தடங்களும் 1,365 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள நிலையில், ஆந்திராவில் 767 கி.மீ., கட்டமைக்கப்படும்.
இத்திட்டம் மூலம் ரயிலில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம். இதில் ஐதராபாத்-பெங்களூரு வழித்தடத்திற்கு ரூ.2.38 லட்சம் கோடியும், ஐதராபாத்-சென்னை வழித்தடத்திற்கு ரூ.3.04 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக ஐதராபாத்-பெங்களூரு வழித்தடத்தில் ஆந்திராவில் 263 கி.மீ., நீளம் ரயில் பாதை, 6 சிறப்பு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த வழித்தடம் கர்னூல், நந்தியால், அனந்தபூர் மற்றும் சத்யசாய் மாவட்டங்கள் வழியாக செல்லும். இதேபோல், ஐதராபாத்-சென்னை வழித்தடத்திற்காக ஆந்திராவில் 9 சிறப்பு ரயில் நிலையங்களுடன் 504 கி.மீ ரயில் பாதை அமைக்கப்படும்.
இவ்வழித்தடம் ஆந்திராவில் உள்ள பல்நாடு, குண்டூர், பாபட்லா, பிரகாசம், நெல்லூர், திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்கள் வழியாக செல்லும். நெல்லூர் மாவட்டத்தில், 116.79 கி.மீ. கட்டுமானத்திற்காக 350.37 ஹெக்டேர் நிலமும், திருப்பதி மாவட்டத்தில் 130.58 கி.மீ. கட்டுமானத்திற்காக 391.74 ஹெக்டேர் நிலமும், சித்தூர் மாவட்டத்தில் 8.17 கி.மீ. கட்டுமானத்திற்காக 24.51 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இவை தவிர, பல்நாட்டில் 21.39 ஹெக்டேர் வன நிலமும், நெல்லூரில் 40.8 ஹெக்டேர், திருப்பதியில் 20.44 ஹெக்டேர் மற்றும் சித்தூரில் 7.68 ஹெக்டேர் வன நிலமும் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ரயில் நிலையங்கள்
2 அதிவேக வழித்தடங்களின் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, ஆந்திராவில் 15 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஐதராபாத்- பெங்களூரு வழித்தடத்திற்காக கர்னூல், டான், குத்தி, அனந்தபூர், துட்டேபண்டா மற்றும் இந்துப்பூரில் சிறப்பு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். ஐதராபாத்-சென்னை வழித்தடத்திற்காக டாச்சேபள்ளி, நம்பூர், குண்டூர், சிராலா, ஓங்கோல், கவாலி, நெல்லூர், கூடூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் சிறப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
