Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் 10 கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருந்து: புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் இரவில் திடீர் ஆலோசனை

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்தியா கூட்டணி சார்பாக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி, பிஆர்எஸ் உள்ளிட்ட தரப்புக்கு இந்தியா கூட்டணி மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகிய 10 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் தனது 50வது திருமண நாளை முன்னிட்டு விருந்தையும் அளித்தார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வருக்கு மாலை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். புதிய கூட்டணிக் கட்சிகளை திமுக கூட்டணிக்குள் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* திருமண நாளையொட்டி வாழ்த்திய தோழமை தலைவர்களுக்கு நன்றி முதல்வர் எக்ஸ்தள பதிவு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ்தள பதிவு: உயிரென உறவென துர்கா என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இத்தருணத்தில் பேரன்பு கொண்டு இல்லம் தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்கு குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்.