Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் டெல்லிக்கு பணியிட மாற்றம்: கடத்தல், கமிஷன் புகார்கள் அதிகரிப்பால் நடவடிக்கை

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை விமான நிலையத்தில், சமீப காலமாக போதைப் பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து வந்தன. இதில், கடத்தல் ஆசாமிகள், பெரும்பாலானோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். சமீபத்தில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஒருவரும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதே போல், வடமாநிலங்களை சேர்ந்த போதைப்பொருள் கடத்தும் கும்பல், சென்னை விமான நிலையத்தை தலைமை இடமாக வைத்து, தொடர்ச்சியாக கடத்தலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையம் போதை கடத்தும் முக்கிய விமான நிலையமாக மாறியது. போதைப் பொருட்கள் மட்டும் இன்றி, தங்கம், தடை செய்யப்பட்ட இ சிகரட்டுகள் போன்றவைகளின் கடத்தல்களும் சமீப காலமாக அதிகரித்து வந்தன.

அதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல்களை, தொழில் நிறுவனங்கள் டெலிவரி எடுக்கும் போது, அவர்களிடம் கட்டாயமாக பணம் வசூல் செய்யப்படுவதாகவும், இதனால் ஒரு சில தொழில் நிறுவனங்கள், தங்களுடைய கார்கோ ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளை, சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி போன்ற விமான நிலையங்களுக்கு மாற்றி விட்டதாகவும், பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, டெல்லியில் உள்ள நிதி அமைச்சகம் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தில் இருந்து 4 உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, விமான நிலையத்தின் சுங்கத்துறை செயல்பாடு, கார்கோ பகுதியில் சுங்கத்துறை செயல்பாடு போன்றவைகளை முழுமையாக சில நாட்கள் ஆய்வு செய்தனர். பின்னர், இதுபற்றி ஒன்றிய நிதி அமைச்சகத்திடம், அறிக்கை கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த தமிழ் வளவன் மற்றும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை துணை ஆணையர் ஹரேந்திர சிங் பால், ஆகிய இருவர் டெல்லி சுங்கத்துறையின் டெக்னிக்கல் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக சென்னை விமான நிலையத்திற்கு, புதிய சுங்கத்துறை ஆணையர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.

எனவே தற்போது இணை ஆணையர்கள், அந்த பொறுப்புகளை நிர்வகித்து வருவதாகவும், விரைவில் சென்னை விமான நிலையத்திற்கு, புதிய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மற்றும் துணை ஆணையர் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து, சுங்கத்துறை முதன்மை ஆணையர் மற்றும் துணை ஆணையர், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், சுங்கத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.