Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க புதிய திட்டம்: ஆகஸ்ட் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கட்டணம் செலுத்தி பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்-டிரஸ்டட் ட்ராவலர் ப்ரோக்ராம் [FTI-TTP] என்ற புதிய திட்டம் ஆகஸ்ட் முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாஸ்ட்டிராக் இமிகிரேஷன்-ட்ரஸ்டட் ட்ராவலர் புரோகிராம் [FTI-TTP] என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த புதிய திட்டத்தில் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய பயணிகள் மற்றும் பூர்வீக இந்தியர்களாக (overseas citizen of India) இருந்து, தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் மட்டுமே பலன் பெற முடியும்.

இந்த திட்டத்தில் பலன் பெற விரும்புபவர்கள், பயணம் செய்வதற்கு முன்னதாகவே, அதற்கான தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில், தங்களை பதிவு செய்து இணைத்துக் கொள்ள வேண்டும். அதோடு கட்டணமாக பெரியவர்கள் ரூ.2,000, குழந்தைகள் ரூ.1,000 மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 அமெரிக்க டாலர் கட்டணங்கள் செலுத்தி, தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஒருமுறை செலுத்தினால், அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதி வரை அந்த கட்டணம் செல்லுபடி ஆகும். பயணம் செய்யும் தேதியில், சென்னை விமான நிலையம் வரும்போது, குடியுரிமை சோதனை பிரிவில, அவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்காக தனி கவுன்டர்கள் இருக்கும்.

அந்த கவுன்டர்களில் சென்று, அங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம், அவர்களுடைய முகம் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டு குடியுரிமை அதிகாரிகளின் நீண்ட நேர கேள்விகள் இல்லாமல் உடனடியாக அவர்களுடைய பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டு, பயணிகள் வேகமாக தங்கள் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்று விடலாம்.

அதேபோல், வருகை பயணிகளும், இதேபோன்று நீண்ட வரிசையில் நிற்காமல், நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ள தனி கவுன்டர்கள் மூலம், குடியுரிமை சோதனையை, குறைந்த நேரத்திலேயே முடித்துவிட்டு, அடுத்ததாக தங்களுடைய உடமைகளை எடுத்து விட்டு வெளியில் செல்வதற்காக, கன்வேயர் பெல்ட் பகுதிக்கு சென்று விடலாம். ஆகஸ்ட் மாதத்தில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இத்திட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வருகின்றன.