சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஒரு கட்சியின் அனுதாபிகளாகவே உள்ளனர். இவர்கள் பொதுமக்களை வரவழைத்து எஸ்ஐஆர் படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுகின்றனர். இதன் காரணமாக, மூத்த குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலையில், கணக்கெடுப்புப் படிவத்தை பதிய முடியாமல் தங்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை உருவாகும்.
மேலும், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குப்பதிவு ஆகிய விபரங்களை வழங்கினாலும் அவர்கள் அதனை வாங்க மறுக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்து, அதிமுக சார்பில் நாளை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.


