Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் முதன்முறையாக 55 ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; ரூ.50 கோடியில் பெரும்பாக்கம் பணிமனை திறப்பு

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகள் மூலம் ரூ.697 கோடி திட்ட மதிப்பீட்டில் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.49.56 கோடி மதிப்பீட்டில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்து, ரூ.233 கோடி மதிப்பிலான 55 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்து மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என மொத்தம் 135 பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, போக்குவரத்துத் துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர், மாவட்ட ஆட்சி தலைவர் சினேகா, இணை மேலாண் இயக்குனர் சி.கு.ராகவன், ஓ.எச்.எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சவுரப் சவுத்ரி, ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் அசோக் லேலண்டு தலைமை இயக்க அலுவலர் கணேஷ் மணி கலந்து கொண்டனர். மீதமுள்ள பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய மூன்று பணிமனைகளிலும், உரிய கட்டிட உட்கட்டமைப்பு மற்றும் மின்னேற்றம் செய்வதற்குரிய கட்டுமான பணிகள் மற்றும் புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூடம், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

* ஏ.சி. பஸ்சில் மாதாந்திர பயணச்சீட்டு ரூ.2,000

மின்சார பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக அமரும் வகையில் இருக்கைகள் ஒரே சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்தள மின்சார பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 65 செ.மீ பதிலாக 70 செ.மீ அகலம் உள்ளது. மகளிருக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில், தாழ்தள மின்சார பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர பயணச்சீட்டு ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* காற்றின் தரம் மேம்படும்

தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளியேறுகிறது. பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுப்பதுடன், சமன் செய்யவும் முடியும். ஒவ்வொரு டீசல் பேருந்தும் ஒரு கிலோ மீட்டருக்கு தோராயமாக 755 கிராம் கார்பன் டை ஆக்சைடை (CO2) வெளியிடுகிறது. புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தும்.

* எந்தெந்த வழித்தடங்கள்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - திருவான்மியூர் செல்லும் 95X வழித்தடத்தில் 10 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - சோழிங்கநல்லூர் செல்லும் 555S வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள், தி.நகர் - திருப்போரூர் செல்லும் 19 வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள், பிராட்வேயிலிருந்து மெரினா கடற்கரை வழியாக - கேளம்பாக்கம் செல்லும் 102 வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள், சென்னை விமான நிலையத்தில் இருந்து - சிறுசேரி ஐ.டி. பூங்கா செல்லும் MAA2 வழித்தடத்தில் 15 ஏ.சி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம் - கேளம்பாக்கம்/சிறுசேரி ஐ.டி.பூங்கா செல்லும் 570 வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 20 ஏ.சி பேருந்துகள்.

திருவான்மியூர் - சிறுசேரி ஐ.டி.பூங்கா செல்லும் 102E வழித்தடத்தில் 5 டீலக்ஸ் பேருந்துகள், அடையாறு பேருந்து நிலையம் - தாம்பரம் செல்லும் 99 வழித்தடத்தில் 5 டீலக்ஸ் பேருந்துகள், பிராட்வே - பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் 102P வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், தி.நகர் - பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் 19AX வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், தாம்பரம் மேற்கு முதல் - சோழிங்கநல்லூர் செல்லும் 99A வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், கிண்டி திரு.வி.க. எஸ்டேட் - பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் 119G வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள்.