மும்பை: புரோ கபடி போட்டியின் 12வது தொடரில் தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ், நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக புரோ கபடி போட்டி ஒவ்வொரு அணிக்கு என உள்ள 12 நகரங்களிலும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு குறிப்பிட்ட நகரங்களில் போட்டி நடக்கின்றன. 11வது சீசன் ஐதராபாத், நொய்டா, புனே என 3 நகரங்களில் மட்டும் நடந்தன. இந்நிலையில், புரோ கபடி 12வது தொடருக்கான கால அட்டவணை நேற்று வெளியானது. இந்த முறை விசாகப்பட்டினம், சென்னை, ஜெய்பூர், டெல்லி என 4 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
முதல் கட்ட லீக் ஆட்டங்கள் ஆக.29ம் தேதி முதல் செப் 11ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2வது கட்ட ஆட்டங்கள் செப்.12 முதல் செப் 28ம் தேதி வரை ஜெய்பூரில் நடக்கும். 3வது கட்ட ஆட்டங்கள் செப்.29 முதல் அக்.12ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருக்கின்றன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் அக்.13 முதல் அக்.23ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளன. போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 2 ஆட்டங்கள் நடைபெறும். டெல்லியில் மட்டும் கடைசி கட்டத்தில் தலா 3 ஆட்டங்கள் நடத்தப்படும்.
பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள், இடம் பின்னர் அறிவிக்கப்படும்.விசாகப்பட்டினத்தில் தொடங்கும் புரோ கபடியின் முதல் நாள், முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகளும், 2வது ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்-புனேரி பல்தன் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆட்டங்கள் நடைபெறும் நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அட்டவணை கடைசிக் கட்ட மாறுதலுக்கு உட்பட்டது என்று புரோ கபடி நிர்வாகம் அறிவித்துள்ளது.