சென்னை : சென்னையில் நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை படகு போக்குவரத்து சேவைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை படகு போக்குவரத்து கொண்டு வரப்பட உள்ளது. 15-20 கி.மீ. தொலைவிற்கு அமைய இருக்கும் வாட்டர் மெட்ரோவை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், பொது போக்குவரத்திற்கு செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
படகு நிலையங்கள், பணிமனைகளுக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த உள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, போக்குவரத்துத் துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆகிய துறைகள் இணைந்து நாளை ஆலோசனை நடத்துகிறது. கூட்டத்திற்கு பிறகு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.