சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. இந்த விலை உயர்வு இந்த மாதமும் தொடர்கிறது. அதுவும் வழக்கத்துக்கு மாறாக காலை, மாலை என இரண்டு வேளையும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.95,200க்கும், ஒரு கிராம் ரூ.11,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை எட்டும் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை நீண்ட நாள்களுக்குப் பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.206க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.