ஆலந்தூர்: சென்னை அருகே சாத்தாங்காட்டில் பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த குரங்கு, நேற்று மாலை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கிண்டி அருகே சாத்தாங்காடு, ஜெகனாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு குரங்கு சுற்றித் திரிவதாக நேற்று கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறை அலுவலர் கலைவேந்தன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த வெளிநாட்டு குரங்கை லாவகமாகப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த குரங்கு மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய நாட்டு காடுகளில் வாழும் சியாமாங் கிப்சன் வகை குரங்கு எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இக்குரங்கு சென்னை பகுதிக்கு எப்படி வந்தது என்பதை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். சாத்தாங்காட்டில் பிடிபட்ட தாய்லாந்து நாட்டு குரங்கு நேற்று மாலை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.