சென்னை: சென்னை-இலங்கை இடையே இயக்கப்படும் 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. மலேசியா, சிங்கப்பூர், தோகா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 12 மணிக்கு புறப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும்.
அதன் பின்பு அந்த விமானம், இலங்கையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டும். ஆனால், நேற்று சென்னை- இலங்கை, இலங்கை- சென்னை ஆகிய 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போதிய பயணிகள் இல்லாததால் இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளின் விமான டிக்கெட்டுகள், வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோல் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த விமானத்தை இணைப்பு விமானமாக பயன்படுத்தி, சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், தோகா போன்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.