Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளிக்கு அதிகளவில் பட்டாசு வெடித்ததால் புகை மண்டலமானது சென்னை: காற்றுமாசு தரக்குறியீடு அதிகபட்சமாக பெருங்குடியில் பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு எதிரொலியாக சென்னை மாநகரம் புகை மண்டலமாக காட்சியளித்தது. காற்று மாசு தரக்குறியீடு அதிகபட்சமாக பெருங்குடியில் பதிவானது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதாலும் போகிப்பண்டிகையின்போது தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காற்றின் தரத்தை மேம்படுத்த மாசுகட்டுப்பாடு வாரியம் மூலமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வந்தாலும் அதனை பொதுமக்கள் கண்டுகொள்ளாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

அந்தவகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு மாநிலம் முழுவதும் காற்று மாசடைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை புகை மண்டலமாக காட்சியளித்தது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக பெருங்குடியில் காற்று மாசு தரக்குறியீடு 229 ஆக பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மணலியில் 175, மணலி நியூ டவுன் - வேளச்சேரியில் 152, ஆலந்தூரில் 127, அரும்பாக்கத்தில் - 146, அம்பத்தூரில் 100 என காற்று மாசு பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் 80 ஆக இருந்த தரக்குறியீடு ஒரே நாளில் 154 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் இது கடந்தாண்டை காட்டிலும் குறைவு தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒவ்வொரு தீபாவளிக்குப் பிறகும் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் காற்று மாசு அளவு அதிகரித்து வருகிறது. பட்டாசு ெவடிப்பதால் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. காற்று மாசடையாமல் இருக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டாலும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, 0-50 என்ற வரம்பு சுத்தமான காற்றினை குறிப்பதாகும். 51-100 என்ற அளவு திருப்திகரமான காற்றின் தரமாகும். இருப்பினும் சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு ஒருசில அசவுகரியங்களை ஏற்படுத்தலாம். 101-200 என்ற வரம்பு மிதமானவையாகும். இது காற்று நல்ல நிலையில் இல்லை என்பதை எடுத்துரைப்பதாகும். இதனால், நுரையீரல் கோளாறுகள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

201-300 என்ற வரம்பு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்குப் பெரிய அளவிலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். 301-400 என்பது மிகவும் மோசமான காற்றின் தரத்தை குறிக்கிறது. இத்தகைய சூழலில் நீண்ட காலம் வாழ்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கடந்தாண்டை காட்டிலும் குறைவாக உள்ளது. கடந்தாண்டு அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின் போது இடையிடையே மழை பெய்த காரணத்தால் காற்று மாசு குறைந்துள்ளது என்றாலும், அந்த புகை தங்கும் சூழல் உருவானதால், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் தொடர்பான சிகிச்சை பெறக்கூடிய நபர்களை வெகுவாக பாதிக்கும். தீபாவளி ஒரு மகிழ்ச்சிக்கான பண்டிகை என்றாலும், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.