3 மணி நேரத்தில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி : 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; சென்னையில் 3 நாட்கள் மிக கனமழை தொடரும்!!
சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்.21) மற்றும் நாளை (அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னைக்கு 3 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில்,"ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை, "இவ்வாறு தெரிவித்தார்.