சென்னை : சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளங்களில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.
இது தொடர்பான செய்தியில், "தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கிண்டியில், 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை 1.11.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.இப்பூங்காப் பகுதியில் மழைநீரைச் சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியைப் பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு புதிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழை காரணமாக, மழைநீர் ஒரே இடத்தில் தேங்காமல் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் மழைநீரால் இந்தக் குளங்கள் தற்போது நிறைந்து காணப்படுகிறது. நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

