சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், சைதாப்பேட்டை, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனி பகுதியில் மார்க் பிராப்பர்ட்டிஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமாக கல்பாக்கத்தில் இசை கல்லூரி உள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் சசிகலாவின் பினாமி என தெரியவந்த நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போல் சென்னை சவுகார்பேட்டையில் தங்கநகை வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ரானுவத்தினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் முடிவில் எவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அசையும் சொத்து, அசையா சொத்து விவரங்கள் உள்ளிட்டவை தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சோதனை 5க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கி அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.